புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (07:00 IST)

103 வயதில் மாநிலக்கல்லூரிக்கு வந்த முன்னாள் மாணவர்: ஆசிரியர் தினத்தில் ஒரு அதிசயம்

நேற்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் சென்னையின் பழமையான கல்லூரிகளில் ஒன்றான மாநிலக்கல்லூரிக்கு 103 வயது முதியவர் ஒருவர் வருகை தந்தது அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்தது
 
 
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் பார்த்தசாரதி என்ற 103 வயது முதியவர். இவர் கடந்த 1938ஆம் ஆண்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநிலக் கல்லூரியில் இளங்கலை பொருளியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். பின்னர் டெல்லியில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி ஓய்வுக்கு பின் மீண்டும் சென்னைக்கு வந்துள்ளார்.
 
 
103 வயதிலும் யாருடைய உதவியும் இன்றி தானே தன்னுடைய பணியை செய்து வரும் இந்த முதியவர் நேற்று ஆசிரியர் தினத்தையொட்டி தான் படித்த கல்லூரியை பார்க்க மாநிலக்கல்லூரிக்கு வருகை தந்தார். அவரை பொன்னாடை போர்த்தி கல்லூரி முதல்வர் ராவணன் வரவேற்றார். பின்னர் தான் பயின்ற பொருளியல் துறை வகுப்பிற்கு சென்று, தான் அமர்ந்த அதே இடத்தில் அமர்ந்த அந்த முதியவர் தன்னுடைய மலரும் நினைவுகளை இன்றைய மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் கல்லூரி காலத்தில் தான் செய்த குறும்புகளை அவர் பகிர்ந்து கொண்டார்
 
 
மேலும் இன்றைய உலகில் வெறும் கல்லூரி படிப்பு மட்டும் போதாது என்றும் உலக அறிவும் நவீன டெக்னாலஜி அறிவையும் வளர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் விடைபெற்று சென்றார். 103 வயது முன்னாள் மாணவரான முதியவருக்கு அனைவரும் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை கொடுத்தனர்