மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் தாமதம் ஏன்.! மக்களவையில் ஜே.பி நட்டா விளக்கம்..!!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஒப்புக்கொள்கிறோம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் (அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கழகம்) மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு கடந்த 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
ஆனால், தற்போது 2024 மக்கவைத் தேர்தல் முடிவடைந்த நிலையிலும் இதுவரை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் தொடங்கப்படவில்லை. இது குறித்து மக்களவையில் இன்று பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை ஒப்புக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் காரணங்களால் தான் கட்டுமான பணிகள் தூங்குவதில் தாமதமானது என்றும் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் மிக விரைவில் துவங்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதுவரை 17 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறக்க பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்று ஜே.பி நட்டா கூறினார்.