ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 26 ஜூன் 2024 (15:23 IST)

திருமாவளவன் பேசிக்கொண்டிருந்த போது மைக் துண்டிப்பு..! மக்களவையில் சலசலப்பு..!!

Thiruma
மக்களவையில் திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தபோது மைக் அணைக்கப்பட்டதற்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
 
மக்களவையில் இன்று புதிய சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா, குரல் வாக்கெடுப்பு மூலம் இரண்டாவது முறையாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.
 
அவருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஓம் பிர்லாவுக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினார்.  தங்களது இருக்கையின் வலது பக்கத்தில் செங்கோல் உள்ளது என்றும் செங்கோல் என்பது அதிகாரத்தின் அடையாளம் அல்ல, யார் பக்கமும் சாயக் கூடாது என்றும் தெரிவித்தார்.
 
கடந்த காலங்களில் மிகச் சிறப்பான சபாநாயகர் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள். ஆனால் ஆளும் கட்சிக்கு ஒரு சார்பாகவும் எதிர்க்கட்சிக்கு ஒரு வகையாகவும் அணுகியிருக்கிறீர்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை என்று திருமாவளவன் தெரிவித்தார்.
 
மேலும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த புரட்சியாளர் அம்பேத்கர், அண்ணல் மகாத்மா காந்தி அடிகள் உள்ளிட்டோரின் சிலைகள் இடமாற்றம் செய்தது குறித்து கேள்வி எழுப்பியபோது மைக் அணைக்கப்பட்டது. பின்னரும் திருமாவளவன் தொடர்ந்து பேசினார்.


அப்போது இந்தியா கூட்டணியின் எம்பிக்கள் சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.