வயநாடு நிலச்சரிவு மிகப்பெரிய பேரிடர்.! பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் ராகுல் காந்தி பேட்டி..!!
வயநாடு நிலச்சரிவு மிகப்பெரிய பேரிடர் என்றும் இதை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு இன்று சென்றனர். நிலச்சரிவால் 290க்கும் மேற்பட்டோர் பலியான மேப்பாடி, முண்டகை, சூரல்மலை பகுதியில் பாதிக்கப்பட்ட இடங்களை இருவரும் பார்வையிட்டனர்.
சூரமலையில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளோரை பார்த்து ஆறுதல் தெரிவித்து, குறைகளை கேட்டறிந்தனர். மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வயநாடு நிலச்சரிவு மிகப்பெரிய பேரிடர் என்று தெரிவித்தார்.
மேலும் வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என்று அவர் கூறினார். வயநாடு மீட்ப பணிகளில் ஈடுபடுவோருக்கு எனது நன்றிகள் என்றும் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு மருத்துவ உதவிகள் தான் உடனடி தேவையாக உள்ளது என்றும் ராகுல் தெரிவித்தார்.
எனது தந்தையை இழந்ததால் ஏற்பட்ட துயரத்தை நிலச்சரிவால் பெற்றோரை இறந்தவர்களிடம் உணர்கிறேன் என்று அவர் கூறினார். ஒட்டுமொத்த நாடும் வயநாடு மக்களுக்கு உதவிட வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டார்.