வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்கள் விடுதலை..
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, விட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
கடந்த ஆகஸ்து மாதம் 5 ஆம் தேதி, காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது மத்திய அரசு. இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பதற்றம் நிலவியது. பல எதிர்கட்சிகள் இது குறித்து கண்டனம் தெரிவித்து வந்தனர்.
காஷ்மீர் முழுவதும் , ராணுவம் குவிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகள், கடைகள் மூடப்பட்டன. மேலும் அரசியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க அரசியல் தலைவர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலரையும் வீட்டுக்காவலில் வைத்தனர்.
குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர்கள் ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டனர்.
தற்போது பதட்டமான சூழல் சற்று தணிந்துள்ள நிலையில், ரயியாபாத் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் யவார் மிர், தெற்கு காஷ்மீர் பகுதியில் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட, சோயப் லோன், தேசிய மாநாட்டு கட்சித் உறுப்பினர் நூர் முகமது ஆகியோர் தற்போது வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் நன்னடத்தை நிபந்தனங்கள் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.