இது வழக்கே இல்ல.. விளம்பரத்துக்காக பண்றீங்க! – ராமர் கோவில் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை!
ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு விடுமுறை அளித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் மனுதாரர்களை எச்சரித்து அனுப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நாளை கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக உத்தர பிரதேசத்தில் மட்டுமல்லாமல் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ராமர் கோவில் திறப்பிற்காக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதை எதிர்த்து சட்டக்கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் “விடுமுறைகள் குறித்த முடிவுகளை எடுக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. மதசார்பின்மையை ஏற்படுத்தும் வகையில் வழிபாடு குறித்த விடுமுறைகளை மாநிலங்கள் அறிவித்துள்ளதாக எந்த ஆதாரத்தையும் காட்ட மனுதாரர்கள் தவறிவிட்டனர். இந்த மனு அரசியல் காழ்புணர்ச்சியாலும், விளம்பர மோகத்தாலும் தூண்டப்பட்டதாக தெரிகிறது. இது பொதுநல வழக்கல்ல.. விளம்பரத்திற்காக தொடுக்கப்பட்ட வழக்கு. இந்த மனுவை தள்ளுபடி செய்வதுடன், மனுதாரர்கள் எதிர்காலத்தில் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்து அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K