பயங்கர துப்பாக்கி சண்டை.! ராணுவ தளபதி வீரமரணம்.! 4 பயங்கரவாதிகள் சுட்டு கொலை..!!
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவ தளபதி வீரமரணம் அடைந்தார். மேலும் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்துக்கு உட்பட்ட அகார் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நேற்று மாலை இந்திய ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஜம்மு -காஷ்மீர் மாநில போலீசார் உடன் இணைந்து இந்திய ராணுவம் இன்று அதிகாலை முதல் பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டது.
அப்போது பயங்கரவாதிகள் தோடா மாவட்டத்துக்குட்பட்ட அஜார் பகுதியில் ஓடும் ஆற்றுக்கு அருகே பதுங்கியிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை சுற்றிவளைக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் முன்னேறி சென்றனர். அப்போது பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
இதில் தேடுதல் வேட்டையை முன்னெடுத்துச் சென்ற இந்திய ராணுவத்தைச் சேர்ந்த இளம் தளபதி (48 வது படைப்பிரிவு) தீபக் சிங் படுகாயம் அடைந்தார். உடனே அவர் ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் வீரமரணம் அடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்புப் படையினரின் பதில் தாக்குதலில் பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும், அவர்களிடமிருந்து ஒரு எம்4 ரக துப்பாக்கியும் கைப்பற்றபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஜூலை மாதத்தில் மட்டும் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 28 பேர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.