திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 14 ஆகஸ்ட் 2024 (14:26 IST)

விமர்சித்தால் கொலை செய்ய முயற்சிப்பதா.? அதிகார மமதையில் திமுக.!அண்ணாமலை கண்டனம்.!!

Annamalai Stalin
12-ஆம் வகுப்பு பள்ளி மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே, காவல் நிலையம் அருகிலேயே, 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் ஒருவரை, திமுகவைச் சேர்ந்த நபரும் அவரது நண்பர்களும், கத்தியால் குத்தியும், கடுமையாகத் தாக்கியும் கொலை முயற்சி செய்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு உள்ளான பள்ளி மாணவர், விரைவாக நலம்பெற வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார். திமுக அரசின் ஊழல் நிர்வாகம் காரணமாக, பழுதடைந்த சாலையில் சென்ற போது வாகனத்திலிருந்து தவறி விழுந்த மாணவர், திமுகவை விமர்சித்ததால், திமுகவினர் அவரைக் கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்கள் என்று அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.
 
திமுக அரசின் நிர்வாகத் தோல்வியை விமர்சித்தால், பள்ளி மாணவரைக் கூட கொலை செய்வோம் எனும் அளவுக்கு, திமுகவினர் அதிகார மமதையில் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அவர் கூறியுள்ளார். திமுக தொண்டர் என்ற பெயரில் இது போன்ற சமூக விரோதிகளை வளர்த்து விடுவது, சமூகத்துக்குப் பேராபத்தினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை முதலமைச்சர் உணர்ந்திருக்கிறாரா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

 
உடனடியாக, பள்ளி மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்கள், சமூகத்துக்கு என்றுமே அச்சுறுத்தலானவர்கள் என்பதை முதலமைச்சர் உணர்ந்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.