தமிழில் பேசிய வாலிபரை தாக்கி கீழே இறக்கி விட்ட நடத்துனர் - பெங்களூரில் பரபரப்பு
தமிழில் பேசிய வாலிபரை பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அடித்து உதைத்து கீழே இறக்கி விட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையை சேர்ந்த கார்த்திக்(30) என்ற வாலிபர் கடந்த 8 வருடங்களாக பெங்களூர் இஸ்ரோ சாலையில் உள்ள விக்யனபுரா பகுதியில் வசித்து வருகிறார். இவர் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சைன்ஸ் கல்வி நிறுவனத்தில் பிஎச்டி படித்து வருகிறார்.
கடந்த மே 5ம் தேதி அவர் தனது கல்வி நிறுவனத்திற்கு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர் படியில் நின்று பயணம் செய்துள்ளார். அப்போது, அவரை உள்ளே வருமாறு நடத்துனர் அழைத்துள்ளார்.
அதற்கு நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிவிடுவேன் என கார்த்திக் தமிழில் கூறியுள்ளார். இதைக்கேட்ட நடத்துனர் ‘நீ தமிழனா?’ எனக் கூறி அவரின் தலையில் அடித்துள்ளார். அவரை கீழே இறங்குமாறு நடத்துனரும் கூறியதோடு, கார்த்திக்கை நடத்துனர் காலால் எட்டி உதைத்துள்ளார்.
இதையடுத்து, அருகிலிருந்த காவல் நிலையத்தில் கார்த்திக் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுபற்றி விசாரணை செய்து வருகின்றனர்.