ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி.. பரிதாபமாக பலியான 8 பயணிகள்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஓடும் ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி ஒன்று பரவிய நிலையில் அதை நம்பிய பயணிகள் ரயிலில் இருந்து கீழே இறங்கிய நிலையில் அருகில் உள்ள தண்டவாளத்தில் வந்த ரயில் மோதி எட்டு பேர் பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பச்சோரா என்ற ரயில் நிலையத்திற்கு புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென அந்த ரயிலில் தீப்பிடித்ததாக வதந்தி பரவியது. இதனை அடுத்து அவசர சங்கலியை பிடித்து இழுத்த பயணிகள் ரயிலில் இறங்கி அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்று உள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே எட்டு பேர் பலியானதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே துறை உயர் அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை செய்து வருகின்றனர். ரயிலில் தீப்பிடித்ததாக தகவல் எப்படி பரவியது? இந்த வதந்தியை பரப்பியது யார்? என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Edited by Siva