வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (15:39 IST)

விரைவில் வருகிறது பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டம்

பிரதமரின் விவசாயிகளுக்கான ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் பிரதமரின் ப்ரதான் மந்திரி கிஷான் மந்தன் யோஜனா திட்டம் இந்த மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து வரும் ஆகஸ்டு 15 சுதந்திர தின விழா அன்று அல்லது இதற்கென பிரத்யேக நிகழ்வு அமைத்து தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு பயனாளர்களின் பட்டியல் தயாரானதும் திட்டம் செயல்படுத்தப்படும். மாதம் 2000 ரூபாய் வருமானம் பெறும் ஏழை விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பி.எம் கிஷான் திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேபோல 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கான பிரதமரின் பென்ஷன் யோஜனா திட்டமும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

பிரதம மந்திரியின் கிஷான் யோஜனா திட்டத்தில் சேரும் விவசாயிகள் மாதம் ரூ.100 காப்புத்தொகையாக செலுத்த வேண்டும். விவாசாயிக்கு 60 வயது பூர்த்தியடையும்போது மாதம் ரூ.3000 ஓய்வூதியமாக அளிக்கப்படும்.

காப்புத்தொகையை பெறுதல், பயனாளர்களுக்கு ஓய்வூதியத்தை மாதம்தோறும் வழங்குதல் ஆகியவற்றை எல்.ஐ.சி நிறுவனம் கையாளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூட்டப்பட்ட இரண்டாவது மக்களவையில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2019-2020 பட்ஜெட்டில் விவசாயிகளின் ஓய்வூதியத்திற்காக 900 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.