திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (15:25 IST)

ஹெல்மெட் அணியாமல் சென்றால் 1000 ரூபாய் அபராதம்: அமலுக்கு வரும் புதிய சட்ட திருத்தம்

இந்தியாவில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால், ரூ.1000 அபராதம் விதிக்கும் புதிய சட்ட திருத்தம் அமலுக்கு வருகிறது.

கடந்த 23 ஆம் தேதி, போக்குவரத்து விதிகளை கடுமையாக்கும் வகையில், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் புதிய போக்குவரத்து சட்ட திருத்த மசோதாவின் படி, சாலை விதிகளை மீறுபவர்களுக்கு பத்து மடங்கு அதிகமாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெல்மெட், சீட் பெல்ட் அணியாவிட்டால் வசூலிக்கப்படும் ரூ.100 அபராத தொகை, சட்ட திருத்த மசோதா அமலுக்கு வந்தால் 1000 ரூபாயாக உயர்த்தப்படும். மேலும் சாலை விதிகளை மீறுபவர்களின் ஓட்டுனர் லைசன்ஸும் 3 மாதங்களுக்கு முடக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

சாலையில் ஆம்புலன்ஸிற்கு வழிவிடாத வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனவும், டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால், 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அபராதம் கட்டாவிட்டால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் சட்ட திருத்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.5000 அபராதமாக விதிக்கப்படும் எனவும், வாகனங்களில் அதிக எடையை ஏற்றிக்கொண்டு செல்பவர்களுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் சட்டத்திருத்தத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு டன் எடைக்கு ரூ.2000 வசூலிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதமும், செல்ஃபோன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.5000 அபராதமும் விதிக்கப்படும் என்றும், மேலும் 6 முதல் 12 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கவும் சட்ட திருத்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.