ஊடுருவிய தீவிரவாதிகள்!; பயங்கர தாக்குதலுக்கு திட்டம் – உஷார் நிலையில் டெல்லி!
இந்திய தலைநகர் டெல்லியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்திற்கு பிறகு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் முயற்சித்து வருவதாக உளவுத்துறை எச்சரித்தது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது தலைநகர் டெல்லியில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாகவும், வெடிக்குண்டு தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறையிடமிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் இந்த மாதத்தில் நடைபெற இருக்கின்றன. இதனால் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிடலாம் என கூறப்படுகிறது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மார்க்கெட், பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் லாட்ஜுகளில் அடையாள அட்டையின்றி யாரையும் தங்க அனுமதிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தீவிரவாத அச்சுறுத்தலால் டெல்லியில் பதற்ற நிலை நிலவுகிறது.