திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 1 அக்டோபர் 2019 (13:18 IST)

பட்டியலினத்தவர் வன்கொடுமை புகார் பதிவு செய்தாலே கைது செய்யலாம்..உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

எஸ்.சி./எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தாலே கைது செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப் படுவதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வன்கொடுமை சட்டத்தின்  கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது செய்யக்கூடாது, தீர விசாரித்த பிறகே கைது செய்யவேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, இந்த சட்டத்தை நீர்த்துப்போக செய்யும் வகையில் உள்ளதாக பல எதிர்ப்புகள் கிளம்பின. இதனால் அழுத்தத்திற்குள்ளாகிய மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யகோரி, மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அருண் மிஷ்ரா, வினீத் சரண், ரவீந்திர பட் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அதன் படி, எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தின் கீழ் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தாலே கைது செய்யலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முன்னதாக பிறப்பித்த சட்டத்தை திரும்ப பெறுவதாகவும் கூறினர்.

எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தீண்டாமையால் பாதிக்கப்படும் பட்டியலினத்தவருக்கான ஒரு பாதுகாப்பு சட்டமாகும். அதன் படி, ஒரு பட்டியலினத்தாரை ஒருவர் தீண்டாமையின் பேராலோ, ஜாதியின் பெயராலோ அவர்கள் துன்புறுத்துப்பட்டாலோ அல்லது அவர்களின் ஜாதி பெயரை குறிப்பிட்டு கொச்சையாக பேசினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கலாம். இந்த சட்டத்தை பலர் தவறாக பயன்படுத்துவதாக கூறப்பட்டாலும், இது ஆயிரக்கணக்கான பட்டியலினத்தவர்களின் உரிமையை காக்கக்கூடிய சட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.