வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (22:35 IST)

நீட் முதுநிலை வினாத்தாள் கசிவா.? போலி செய்திகளை நம்ப வேண்டாம்.! தேர்வு வாரியம்..!!

Neet Leaked
முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் 70 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக பரவி வரும் தகவல் பொய்யானது என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
 
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூன் 23 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், நீட் முதுநிலை தேர்வு நடைபெறுவதற்கு முந்தைய நாள் இரவு திடீரென நீட் முதுநிலை தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப் படுவதாக அறிவிக்கப்பட்டது. 
 
நீட் இளநிலை தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் எழுந்ததன் காரணமாக நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் அறிவித்தது.
 
இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாக சர்ச்சை கிளம்பியுள்ளது. 'NEET PG Leaked Materials’ என்ற பெயரில் டெலிகிராம் சேனல் செயல்படுவதாகவும், அதில் ரூபாய் 70,000 வரை நீட் பிஜி வினாத்தாளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாகவும் புகார் எழுந்தது. 
 
Statement
இந்நிலையில், நீட் முதுநிலை தேர்வை நடத்தும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு என்ற தகவல் தவறானது என்றும், டெலிகிராம் சமூக வலைதளத்தில் நீட் முதுநிலை தேர்வு வினாத்தாள் வெளியாகவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 
 
தேர்வர்கள் போலி செய்திகளை நம்ப வேண்டாம் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், நீட் முதுநிலை தேர்வுக்கான வினாத்தாள்கள் இன்னும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தால் தயாரிக்கப்படவே இல்லை என்றும் தெரிவித்துள்ளது.


நீட் வினாத்தாள் விற்பதாக கூறி யாராவது தேர்வர்களை தொடர்பு கொண்டால் தகவல் தெரிவிக்குமாறும் தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் அறிவுறுத்தி உள்ளது.