வெள்ளி, 4 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (22:12 IST)

படுதோல்வி அடைந்த இந்திய அணி.! ஒருநாள் தொடரை வென்று இலங்கை வரலாற்று சாதனை..!!

Srilanka Won
இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று  ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
 
இந்தியா - இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி சமணில் முடிவடைந்த நிலையில்,  2-வது ஆட்டத்தில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
இந்நிலையில் கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய அந்த அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அவிஷ்கா பெர்னான்டோ 96 ரன்களை குவித்தார்.
 
இதையடுத்து 249 என்ற வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 5ஆவது ஓவரில் போல்டாகி 6 ரன்களுடன் வெளியேறினார். அடுத்து ரோஹித் - கோலி இணை கைகோத்தது. ஆனால் 8 ஆவது ஓவரில் ரோஹித் 35 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 
 
தொடர்ந்து ரிஷப் பந்து 6 ரன்கள், விராட் கோலி 20 ரன்கள், அக்சர் படேல் 2 ரன்கள், ஷ்ரேயாஸ் ஐயர் 8 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் வந்த வீரர்களும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாததால்  26.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 138 ரன்களுக்குள் சுருண்டது.

இதன் மூலம் இலங்கை அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வென்றது. இலங்கை அணி இந்தியாவுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது.  27 ஆண்டுகள் கழித்து ஒருநாள் போட்டித் தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.