வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2024 (14:08 IST)

விஸ்வரூபம் எடுக்கும் 'மூடா' முறைகேடு.! கர்நாடகா முதல்வர் மீது வழக்கு தொடர ஆளுநர் ஒப்புதல்.!!

sitharamaiya
'மூடா' முறைகேடு தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர அம்மாநில ஆளுநர் அனுமதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் உள்ள விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட‌து. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
 
இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இந்த விவகாரத்தை யைமப்படுத்தி முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. சட்டசபை, மேல்சபை கூட்டத்திலும் இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. 
 
இந்நிலையில் இந்த முறைகேடு தொடர்பாக டி.ஜே. ஆபிரகாம், பிரதீப் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர், சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, "டி.ஜே. ஆபிரகாம், பிரதீப் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மூன்று மனுக்களின் அடிப்படையில் முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளதாக கர்நாடக ராஜ்பவன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்திருப்பது குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.


இந்த ஊழல் விவகாரம் குறித்து முதல்வர்  சித்தராமையாவிடம் விசாரணை நடத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. விசாரணையின் முடிவில் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் முதல்வர் பதவியில் இருந்து  சித்தராமையா விலக வேண்டிய நிலை உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.