வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 17 ஆகஸ்ட் 2024 (13:21 IST)

உரிமைத் தொகை - விண்ணப்பித்தால் உடனே ரூ.1000.! ஆட்சியர் அலுவலகங்களில் திரண்ட பெண்களால் பரபரப்பு.!!

Ladies
மகளிர் உரிமைத் தொகைக்கு இன்று விண்ணப்பித்தால் உடனே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற வதந்தி பரவியதை அடுத்து  திருச்சி, விழுப்புரம், விருதுநகர், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பெண்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
 
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளர்களாக இணைவதற்கு பொருளாதார தகுதிகள் அறிவிக்கப்பட்டது. ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

சொந்த பயன்பாட்டுக்கு கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனம் வைத்திருக்க கூடாது. குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் வருமான வரி செலுத்துபவர்களாக இருக்க கூடாது என்பது உள்ளிட்ட பல நிபந்தனைகள் வகுக்கப்ப்பட்டன.அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளை எட்டியவர்கள் திட்டத்தில் பயனாளர்களாக சேர்க்கப்பட்டனர்.

அந்த வகையில் சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனளார்கள் பட்டியலில் இடம்பெற்றனர். கடந்த மாதம் மேலும் 1.48 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். புதிய ரேஷன் அட்டைகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு அட்டைகள் வழங்கப்படும் நிலையில் அவர்களும் விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர்.
 
இந்நிலையில் ஆகஸ்ட் 17, 19, 20 ஆகிய தேதிகளில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நடைபெறுவதாக வாட்ஸ் அப் மூலம் வதந்தி ஒன்று பரவியது. இதனை நம்பி ஏராளமான பெண்கள் திருவாரூர், திருச்சி, விருதுநகர், மதுரை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்களில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


இது பொய்யான தகவல் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பெண்கள் அனைவரும் கலைந்து சென்றனர். அரசுத் திட்டங்கள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.