ஊரடங்கால் வறுமை: மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொண்ட தாய்
இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனாவால் ஏற்படும் பலியை விட பசி பட்டினியால் ஏற்படும் பலி மிக அதிகமாக இருக்கும் என்று ஏற்கனவே பொருளாதார நிபுணர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள் எச்சரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக எந்தவித முன்னெச்சரிக்கையும் இன்றி திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் ஏழை எளிய மக்கள் கடும் சிக்கலில் உள்ளனர் என்பதும் வேலை இன்றி வருமானம் இன்றி இருக்கும் ஏழை எளியவர்கள் இறுதி கட்டமாக தற்கொலை வரை சென்று வருகின்றனர் என்ற செய்திகளும் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன
இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மீர்பட் என்ற பகுதியை சேர்ந்த 55 வயது பெண் ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் காப்பாற்ற முடியாமல் பசியும் பட்டினியுமாக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் மூன்று குழந்தைகளுடன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் போலீசார் நான்கு பிணங்களையும் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
முதல்கட்ட விசாரணையில் தூக்கில் தொங்குவதற்கு முன் அவர்கள் எழுதிய கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் வேலையின்றி வருமானமின்றி கடனில் சிக்கித் தவிப்பதால் தற்கொலை முடிவை எடுத்ததாக அதில் எழுதி இருந்ததாகவும் தெரியவந்துள்ளது
இதனையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்துவது முக்கியம் என்றாலும் பசியால் வாடும் ஏழை எளிய மக்களை பாதுகாக்க வேண்டியது அதைவிட முக்கியம் என்றும், அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்