புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 19 ஜனவரி 2019 (16:05 IST)

கொல்கத்தா கூட்டத்தில் வங்கமொழியில் பேசிய மு.க.ஸ்டாலின்

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூட்டிய எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள பாஜகவுக்கு எதிரான கட்சியினர் ஒன்று கூடியுள்ளனர். குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து மு.க.ஸ்டாலின், சந்திரசேகரராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் கொல்கத்தாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்டமான கூட்டத்தில் சற்றுமுன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச ஆரம்பித்தார். 'வங்கத்து புலிகளே! தமிழ்நாட்டு ஸ்டாலினின் வணக்கம்' என வங்க மொழியில் தொடங்கிய ஸ்டாலின் அதன்பின் ஆங்கிலத்தில் பேசினார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தல் நாட்டின் இரண்டாவது சுதந்திர போராட்டமாக அமையும் என்றும், பாஜகவிடம் இருந்து இந்தியாவை மீட்பதுதான் இந்த இரண்டாவது சுதந்திர போராட்டத்தின் நோக்கம் என்றும் பேசிய ஸ்டாலின், 'பிரதமர் மோடி கூறிய பொய்களில் மிகப்பெரிய பொய் கருப்புப்பணத்தை மீட்பேன் என்று கூறியதுதான் என்றும் கூறினார்.

மேலும் எதிரிகளே இல்லை என கூறிய பிரதமர் மோடிதான் எதிர்க்கட்சிகளை பார்த்து பயப்படுகிறார் என்றும், நம் ஒற்றுமையால் அவருக்கு பயம் வந்துவிட்டது என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுபோல் நாம் வேறு மாநிலங்களாக இருந்தாலும் ஒற்றுமையுடன் போராடி பாஜகவை வீழ்த்த வேண்டும் என்றும் திமுக தலைவர் பேசினார்.