ஞாயிறு, 6 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஜூலை 2024 (15:55 IST)

நீட் வினாத்தாள் கசிவு உண்மைதான்.! ஒப்புக்கொண்ட மத்திய அரசு.! சிபிஐக்கு அதிரடி உத்தரவு..!!

Neet SC
நீட் வினாத்தாள் கசிந்தது உண்மைதான் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற இளநிலை நீட் நுழைவு தேர்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக, மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட 38 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு, குறிப்பிட சிலருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்ணை ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் பின்னர், மத்திய அரசின் உத்தரவையடுத்து, இளநிலை நீட் தேர்வு மோசடி தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. 
 
இதனிடையே, நீட் முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தது. 
 
இந்நிலையில், நீட் தேர்வு தொடர்பான 38 மனுக்களும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
 
ஒரு இடத்தில் மட்டும் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், வினாத்தாள் கசிவால் பலனடைந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.
 
20 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் தொடர்புள்ள விவகாரத்தில் மத்திய அரசு எடுத்து நடவடிக்கை என்ன என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, சமூகவலைதளங்கள் மூலம் வினாத்தாள் கசிந்து இருந்தால் அதிகமானோருக்கு கிடைத்திருக்கும் என்றும் கடந்த ஆடை விட அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர், இதையும் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

 
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.