மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்..! அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு..!!
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசின் டான் டீ நிர்வாகம் ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்றும் அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை நடத்தி வரும் தி பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேசன் (பிபிடிசி) என்ற தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் வருகிற 2028 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைய உள்ளதால், கடந்த சில வாரங்களுக்கு முன்பாகவே தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டு, தேயிலைத் தோட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதிக்குள் தொழிலாளர்களை மலைக்கிராமங்களில் இருந்து கீழே இறங்க நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. தேயிலை உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் வேலையிழந்துள்ள தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இப்பகுதியிலே வாழ்வதற்கு அரசு வழிவகை செய்ய வேண்டும், தேயிலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் அல்லது 5 ஏக்கர் நிலம் தந்து அதில் விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர்.
மாஞ்சோலை மக்களை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகின்றனர். இதனிடையே, தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு வசதி செய்து கொடுக்கும் வரை அவர்களை கீழே இறக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்த போது, மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை அரசின் டான் டீ நிர்வாகம் ஏற்று நடத்த முன்வர வேண்டும் என்று நீதிபதிகள் ஆலோசனை வழங்கினர்.
தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள டான் டீ நிர்வாகம் முன் வர வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு மனித தன்மையுடன் அணுக வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும் அரசின் முடிவு குறித்து ஆலோசித்து நிரந்தர தீர்வுடன் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.