அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் மனு.! சிபிஐக்கு அதிரடி உத்தரவு..!!
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், முதல்வர் கெஜ்ரிவால் தாக்கல் செய்த ஜாமின் மீது சிபிஐ பதில் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்களவை தேர்தலில் பிரசாரம் செய்ய தனக்கு ஜாமின் வழங்க வேண்டும்' என்று அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதன்பேரில் கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
இதன்பிறகு மக்களவை தேர்தலுக்காக ஆம் ஆத்மி அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட கெஜ்ரிவால் ஜூன் 2ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார். இதற்கிடையே தனக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று டெல்லி ரோஸ் அவென்யூ விசாரணை நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 21ம் தேதி விசாரித்த நீதிமன்றம், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
ஆனால் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே சி.பி.ஐ., அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை ஜூன் 26ம் தேதி திகார் சிறையில் வைத்து கைது செய்தனர்.
இந்நிலையில், சி.பி.ஐ. வழக்கில் ஜாமின் கேட்டு டில்லி உயர்நீதிமன்றத்தில் நேரடியாக கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. கெஜ்ரிவால் மனுவை விசாரித்த நீதிபதி நீனா பன்சால், சி.பி.ஐ. பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.