விக்ரம் லேண்டரின் நிலை என்ன??..இஸ்ரோ விஞ்ஞானிகள் என்ன சொல்கிறார்கள்??
சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் எந்த நிலையில் உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர், ரோவர் ஆகிய 3 பகுதிகளை உள்ள சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. இதனை தொடர்ந்து நிலவில் இருந்து 35 கி.மீ. தொலைவில் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது. அதன் பின்பு விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது, நிலவுக்கு 2.1 கி.மீ. தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் முயற்சியை கைவிடாத இஸ்ரோ விஞ்ஞானிகள், இரண்டு நாட்களுக்கு முன்பு, நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டரின் மூலம், விக்ரம் லேண்டர், நிலவின் திட்டமிடப்பட்ட இடத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் சாய்ந்து கிடப்பதாக கண்டறிந்தனர். இந்நிலையில் லேண்டரில் எதுவும் சேதம் ஏற்பட்டுள்ளதா? என கண்டறிய முயன்ற போது லேண்டரில் எந்த வித சேதமும் இல்லை என தெரியவந்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள், லேண்டரின் 4 கால்களும் ஒரே சமயத்தில் நிலவின் பகுதியை தொட்டிருந்தால் லேண்டர் சாய்ந்து இருக்காது. விக்ரம் லேண்டரை பெங்களூர் இஸ்ரோ கட்டுப்பாட்டு அறையிலிருந்து மெதுவாக தரையிறக்கிக் கொண்டிருக்கும் போது சிக்னல் துண்டிக்கப்பட்டதால், அது வேகமாக தரையிறங்கியுள்ளது. லேண்டரில் உள்ள ஆண்டனாக்கள் ஆர்பிட்டரை நோக்கியோ அல்லது பூமியில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையத்தை நோக்கியோ இருந்தால் தான் அதனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியும் எனவும் கூறுகின்றனர்.
தரையில் விழுந்து கிடக்கும் லேண்டர் செயல்படும் நிலையில் உள்ளதா? என்பது குறித்தும் அதனுடன் எப்படி தொடர்பு கொள்வது என்பது குறித்தும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.