நிற அடிப்படையில் அவமதிப்பு.! சாம் பிட்ரோடாவுக்கு பிரதமர் கண்டனம்..!!
நாட்டு மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உலகின் ஜனநாயகத்துக்கு இந்தியா ஓர் சிறந்த உதாரணம் என்றும் நாட்டின் கிழக்கில் உள்ள மக்கள் சீனர்களை போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களை போலவும், வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருக்கிறார்கள் என்று இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தொழிலதிபருமான சாம் பிட்ரோடா தெரிவித்தார்.
இந்நிலையில், அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவிய நிலையில், நாட்டில் நிறவெறியை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்து வருவதாக கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் வாரங்கலில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய பிரதமர், காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவின் கருத்துகள் கோபமடையச் செய்துள்ளன என்றும் நாட்டு மக்களவை தோல் நிறத்தின் அடிப்படையில் அவமரியாதை செய்வதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
மேலும், தன் மீது அவதூறுகள் வீசப்படும்போது தன்னால் பொறுத்துக்கொள்ள முடியும் என்றும் மக்கள் மீது வீசப்படும் அவதூறுகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
நாட்டின் குடியரசுத் தலைவர் என்ற நற்பெயரும், ஆதிவாசி குடும்பத்தின் மகளுமான திரெளபதி முர்முவை ஏன் இவ்வளவு காலம் காங்கிரஸ் கட்சி வீழ்த்த வேண்டும் என நினைக்கின்றன என்பது குறித்து அதிக முறை தான் யோசித்ததாகவும் அதற்கு இன்று தான் காரணத்தை தெரிந்து கொண்டதாகவும் அவர் கூறினார்.
தோல் நிறத்தின் மூலம் நாட்டு மக்களை தவறாக பயன்படுத்துவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். அவர்கள் நாட்டை எங்கே கொண்டு செல்வார்கள் என கேள்வி எழுப்பிய பிரதமர் மோடி எந்த நிறத்தில் இருந்தாலும் சரி மக்கள் கிருஷ்ணரை வணங்குபவர்கள் என்று தெரிவித்தார்.