1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 2 நவம்பர் 2017 (12:47 IST)

சினிமா பாணியில் குற்றவாளிகளை மிமிக்ரி செய்ய வைத்து ரசித்த இன்ஸ்பெக்டர்..

சினிமாவில் இடம் பெறும் காட்சி போல், இன்ஸ்பெக்டர் ஒருவர் குற்றவாளிகளை விடிய விடிய மிமிக்ரி செய்ய வைத்து ரசித்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
உதயநிதி ஸ்டாலின் மற்றும் சந்தானம் நடித்த ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற படத்தில், காவல் நிலையத்தில் சந்தானத்தை விடிய விடிய மிமிக்ரி செய்ய வைத்து போலீஸ் அதிகாரிகள் ரசிப்பது போல் ஒரு காமெடி காட்சி அமைக்கப்பட்டிருக்கும். தற்போது அதேபோன்ற சம்பவம் நிஜத்திலும் அரங்கேறியுள்ளது.
 
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தரூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள அலவி என்பவர், சமீபத்தில் 3 குற்றவாளிகளை கைது செய்து காவல் நிலையத்தில் உள்ள அறையில் அடைத்திருந்தார்.  அந்நிலையில், இன்ஸ்பெக்டர் அலவி, நேற்று இரவு அவர்களை அழைத்து அவர்களின் ஆடைகளை களைந்து விட்டு, அவர்கள் பாட்டு பாடும் படியும், மிமிக்ரி செய்து காட்டும் படியும் கூறியுள்ளார்.
 
உற்சாகமான குற்றாவாளிகளும் சமீபத்தில் பேமஸ் ஆன ஜிமிக்கி கம்மல் உட்பட பல சினிமா பாடல்களை பாடிக்காட்டினர். அதில், சிலர் தங்களுக்கு தெரிந்த மிமிக்ரியும் செய்து காட்டினர். இந்த சம்பவம் விடிய விடிய நடந்துள்ளது.
 
இதை அங்கிருந்த ஒரு காவல் அதிகாரி தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டார். இதனால், இந்த வீடியோ மாநிலம் முழுவதும் பரவியது. 
 
இதுகண்டு பொங்கியெழுந்த சமூக ஆர்வலர்கள், இது மனித உரிமை மீறல் என அந்த காவல் அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.