புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 22 அக்டோபர் 2017 (20:14 IST)

நீயா நானா? ரத்து ஏன்? இயக்குனர் ஆண்டனி விளக்கம்

இன்று ஒளிபரப்பாகவிருந்த நீயா நானா? நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  யார் அழகு? கேரளத்துப் பெண்களா? தமிழ்நாட்டுப் பெண்களா? என்ற தலைப்பில் இன்று நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சிக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது மட்டுமின்றி காவல்துறையிலும் புகார் செய்யப்பட்டதால் காவல்துறையினர்களின் அறிவுரையின்படி இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி கூறியுள்ளார்.



 
 
மேலும் அவர் தனது ஃபேஸ்புக்கில் இதுகுறித்து கூறியதாவது: இன்றைய நீயா நானாவின் தலைப்பு கல்லூரி கேம்பஸ் உரையாடல். அது கேரள பெண்கள் vs தமிழ் பெண்களின் அழகு பற்றி பேசியது. புதிய தலைமுறையைச் சார்ந்த உளவியல் தலைப்புகள், தமிழ் சூழலில் அவர்களின் உலகமான விஜய்-அஜித், மீம் கிரியேட்டர்கள், பெருகும் ஆண் பையன்களின் மேக்கப், காதலில் சுயமரியாதை போன்ற பல தலைப்புகளில் பேசியுள்ளோம்.
 
அந்த வடிவத்தில் எடுக்கப்பட்ட தலைப்பே இன்றைய நீயா நானா. இதில் கேரள பெண்களும், தமிழ் பெண்களும் தங்களின் உடையழகு பற்றியும், நகையழகு பற்றியும், ஆளுமையின் அழகு பற்றியும், அகமும் புறமும் சார்ந்து பேசினர். அவர்களின் குரல் இந்த முறை இடதுசாரி பெண்ணியவாதிகளால் நெறிக்கப்பட்டது. பெண்ணின் அழகைப் பற்றி பேசவே கூடாது என்று காவல்துறை வாயிலாக தடை வாங்கியுள்ளனர் இடதுசாரி பெண்ணியவாதிகள்.
 
கல்லூரி பெண்கள் தங்கள் உளவியல் பற்றி பேசுவதைக் கேட்க கூட பொறுமையில்லாமல் இவர்கள் கூச்சலிடுவது ஏன்? ஒரு நிகழ்ச்சி வருவதற்கு முன்பே தடை விதிக்க கோரும் மத அடிப்படைவாதிகளுக்கும், சாதிய அடிப்படைவாதிகளுக்கும், இடதுசாரி அடிப்படைவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்?''
 
இவ்வாறு ஆண்டனி தனது ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியுள்ளார்