ஜார்க்கண்டில் முறிந்தது ' இண்டியா' கூட்டணி: தனித்து போட்டி என கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!
சமீபத்தில் ஹரியானாவில் நடந்த தேர்தலில் இந்தியா கூட்டணி முறிந்த நிலையில், தற்போது ஜார்கண்ட் மாநிலத்திலும் இந்தியா கூட்டணி முறிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இங்கு கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியா கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13, 20 ஆகிய இரண்டு தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மொத்தம் உள்ள 81 தொகுதிகளில், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ், ஜார்கண்ட் முத்தி மோட்சா உள்பட சில கட்சிகள் 70 தொகுதிகளை எடுத்துக் கொண்டதாகவும், 11 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று அறிவித்த நிலையில், தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணியில் இருந்து விலகி 15 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தில் இந்தியா கூட்டணி முறிந்தது என்பது தெரியவருகிறது.
கூட்டணி கட்சிக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றும், ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியதால் தனித்து போட்டியிடுவோம் என்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் கூறியுள்ளனர்.
Edited by Siva