வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (14:19 IST)

தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் அதிகரிப்பு.! சமூக நீதியைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.! எல்.முருகன் காட்டம்.!

L Murugan
தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், சமூக நீதியை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை எனவும்  மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக டெல்லி பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பட்டியலின மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள் அதிகமாகியுள்ளன என்று குற்றம் சாட்டினார். 
 
சென்னையில் இரு தினங்கள் முன்பு பட்டியலின தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டதாகவும், இதுதான் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் நிலைமை விமர்சித்தார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் திமுக அரசு தோல்வி அடைந்து விட்டது என குற்றம் சாட்டிய எல்.முருகன் பட்டியலின தலைவர்களுக்கும், பட்டியலின மக்களுக்கும் திமுக ஆட்சியில் எந்த பாதுகாப்பும் இல்லை என்று சரமாரியாக விமர்சித்தார்.  
 
சமூக நீதி காவலர்கள் என சொல்லிக்கொள்ளும் திமுக அரசு, அதனை முறையாக பின்பற்றவில்லை என்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு இனி சமூக நீதியைப் பற்றி பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களில் 40 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்டோர் என்று அவர் தெரிவித்தார்.


ஹாத்ரஸ் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி,  கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை ஏன் நேரில் சந்திக்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பினார்.