வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள்.. நாளை தவறவிட்டால் அபராதம்..!
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை அதாவது செப்டம்பர் 15ல் முடிவடைகிறது என்றும், இதுவரை, 2025-26 மதிப்பீட்டு ஆண்டுக்காக 6 கோடிக்கும் மேற்பட்ட வருமான வரி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என வருமான வரித் துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
முன்னதாக, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆக இருந்தது. ITR படிவத்தில் செய்யப்பட்ட சில மாற்றங்கள் காரணமாக, அபராதம் இல்லாமல் தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை வருமான வரித் துறை செப்டம்பர் 15 வரை நீட்டித்தது.
கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்க, இதுவரை கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் விரைந்து செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். வரி செலுத்துவோருக்கு உதவ 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் இயங்கி வருகிறது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2023-24 நிதியாண்டில் 6.77 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. 2024-25 நிதியாண்டில் இது 7.28 கோடியாக உயர்ந்து, 7.5% வளர்ச்சி கண்டுள்ளது.
Edited by Siva