மீண்டும் புழக்கத்திற்கு வந்திருக்கும் ஒரு ரூபாய் நோட்டு
இந்தியாவில் கடந்த 1994 ஆம் ஆண்டு முதல், ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டு, ஒரு ரூபாய் நாணயங்களே பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் 23 வருடங்களுக்கு பிறகு ஒரு ரூபாய் நோட்டு தற்பொழுது புழக்கத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடி அவர்கள் கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையையடுத்து, அன்று புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டு, புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து கடந்த 2017 ஆம் வருடத்தில் புதிய 200,50 மற்றும் 10 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்தது.
இந்நிலையில் கடந்த மே மாதம் புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்த நிலையில் தற்போது, புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் பழைய வடிவமைப்பையே ஒத்திருக்கிறது. ஆனாலும் அடர் இளஞ்சிவப்பு மற்றும் பச்சை வண்ணத்தில் இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் உள்ளன. புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஒரு ரூபாய் நோட்டில் மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த் தாசின் கையெழுத்து இடம்பெற்றுள்ளது. நோட்டின் வலது பக்க அடிப்பகுதியில் கறுப்பு நிறத்தில் எண்கள் இடம் பெற்றுள்ளன. இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் புழக்கத்துக்கு வந்துள்ளது.