வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 7 மார்ச் 2024 (14:55 IST)

சிறுமி கொலை வழக்கு.! டிஜிபிக்கு ஆளுநர் தமிழிசை உத்தரவு..! முதல்வருக்கு கடிதம்..!!

Tamilsai Alosonai
சிறுமி கொலை வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். மேலும் முதல்வர் ரங்கசாமிக்கு உள்ள கடிதத்தில், சிறுமி கொலை வழக்கில் விரைவாக நீதி கிடைக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.
 
புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி கொலை வழக்கு சம்பந்தமாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்,  காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார்.

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், டிஜிபி ஸ்ரீநிவாஸ், டிஐஜி சின்ஹா, எஸ்எஸ்பி அனிதா ராய், எஸ்எஸ்பி கலைவாணன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது துணைநிலை ஆளுநரின் செயலர் அஜித் விஜய் சௌதரி உடன் இருந்தார்.
 
சிறுமி கொலை வழக்கில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருப்பது குறித்தும், விசாரணையின் நிலவரம் குறித்தும் துணைநிலை ஆளுநர் தமிழிசை கேட்டறிந்தார். விசாரணையை விரைந்து முடிக்கவும் குற்றவாளிகளை முழுமையாக அடையாளம் கண்டு கடுமையான தண்டனையைப் பெற்றுத் தரவும் துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். 
 
இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை காவல்துறை முடுக்கி விட வேண்டும் என்றும் தமிழிசை உத்திரவிட்டார்.
 
tamilasai
முதல்வருக்கு தமிழிசை கடிதம்:
 
சிறுமி கொலை தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு, ஆளுநர் தமிழிசை எழுதிய கடிதத்தில்,   “மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய சிறுமி மரணம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனசாட்சியையும் உலுக்கி இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த வழக்கில் விரைந்தும் விரிவாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணை குழுவிடம் இந்த வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டு இருப்பதை அறிகிறேன் என்றும் ஒரு சிறப்பு தடயவியல் குழுவின் பங்களிப்பும் இந்த விசாரணையை விரைவுபடுத்த துணையாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
 
புதுச்சேரி காவல்துறை, இந்த வழக்குக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணையை விரைவுப்படுத்தும் என்று தமிழிசை கேட்டுக் கொண்டுள்ளார்.

 
விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று பொது மக்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பினை ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் இதன் மூலமாக நிர்வாகத்தின் மீதும், நீதி அமைப்பின் மீதும் மக்களுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தி சட்டம்-ஒழுங்கு நிலையை நிலை நாட்ட முடியும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.