ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 13 ஆகஸ்ட் 2024 (18:27 IST)

பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு.! சிபிஐக்கு மாற்றியது கொல்கத்தா நீதிமன்றம்..!!

Kolkatha Court
பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் உள்ள கூட்ட அரங்கில், கடந்த வெள்ளிக்கிழமை முதுநிலை மருத்துவ மாணவி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. கண்கள், வாய், அந்தரங்க உறுப்புகளில் ரத்தம் கொட்டிய நிலையில், இடது கால், கழுத்து, வலது கை, உதடுகளில் காயங்கள் இருந்தன. உடற்கூறாய்வு அறிக்கையின்படி, அந்த இளம் பெண்மருத்துவர், கொலை செய்யப்பட்ட பின்பே, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
 
விசாரணையில், கொலை குற்றவாளி, மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்லும் காவல் தன்னார்வலர் என்பது தெரியவந்தது. மேலும், கொலை செய்த பின் எந்த பதற்றமும் இல்லாமல், தப்பியோடாமல், ரத்தக் கறைகள் இருந்த உடைகளை துவைத்த அந்த நபர், பின்னர் அருகில் உள்ள காவல்பூத்திற்குச் சென்று நன்றாக உறங்கியிருக்கிறார். அந்த நபரின் ஷுவில் அகலாமல் இருந்த ரத்தக் கறைகளைக் கொண்டு அவர்தான் கொலை செய்தவர் என்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர்.

சம்பவ நாளில் மருத்துவமனையில் பணியில் இருந்தவர்களிடமும் காவல்துறையினர் விசாரித்துவருகிறார்கள். சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வருகிறார்கள். மேற்கு வங்கத்தை அதிர வைத்துள்ள இந்த கொலைச் சம்பவத்தை அடுத்து அந்த மாநிலத்தில் உள்ள முதுநிலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


மருத்துவ மாணவியின் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி கொல்கத்தா நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மாணவி கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐயிடம் ஒப்படைக்கவும் ஆணை பிறப்பித்துள்ளது.