தற்கொலைக்கு அனுமதி வேண்டும்; குடியரசு தலைவருக்கு மனு அனுப்பிய தம்பதி
மும்பையை சேர்ந்த வயதான ஒரு தம்பதி தற்கொலை செய்துக்கொள்ள அனுமதி வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
தெற்கு மும்பையில் வசித்து வரும் நாரயணன் லவாடே(88) மற்றும் அவரது மனைவி ஐராவதி(78) தற்கொலை செய்துக்கொள்ள அனுமதி கேட்டு குடியரசு தலைவருக்கு மனு அனுப்பியுள்ளனர். அதில்,
நான் மற்றும் எனது மனைவி நல்ல உடல் நலத்துடன் உள்ளோம். எங்களுக்கு எந்தவித கடுமையான வியாதியும் இல்லை. நாங்கள் சமூகத்திற்கோ அல்லது எங்களுக்கோ எந்தவித பயனும் இன்றி இருக்கிறோம். எங்களுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை. எங்களது சகோதர சகோதரிகளும் இறந்து விட்டனர்.
எங்களது விருப்பத்திற்கு எதிராக நாங்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்பது நாட்டின் பற்றாக்குறையாக உள்ள வளத்தினை வீணடிக்கும் செயலாகும். எங்களது மரணத்திற்கு பின்னர் எங்களது உடல்களை நன்கொடையாக அளிப்பதற்கு முன்பே முன்வந்து விட்டோம்.
எங்களிடம் உள்ள குறைந்த அளவிலான செல்வத்தினையும் மாநில கருவூலத்திற்கு அளிக்க முன்வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
குரியரசு தலைவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு கருணை காட்டும் அதிகாரம் உள்ளது. நாங்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறோம். எங்களது வாழ்க்கையை முடித்து கொள்வதற்கு அனுமதி அளித்து குடியரசு தலைவர் எங்களுக்கு கருணை காட்ட முடியும் என்று கூறியுள்ளனர்.