1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (16:08 IST)

காதல் தோல்வியால் குடும்பமே தற்கொலை : நெல்லையில் அதிர்ச்சி

நெல்லை மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகேயுள்ள சங்குபுரம் என்ற பகுதியில் வசித்து வருபவர் சீதா(55). கணவரை இழந்த சீதா, அம்பாச சமுத்திரத்தில் உள்ள தபால் நிலையத்தில் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொர்ணா(26), பத்மா(20) என்ற இரு பெண்கள் உள்ளனர். 
 
இந்நிலையில், இன்று காலை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது சீதா, சொர்ணா, பத்மா ஆகியோரும் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
 
போலீசார் சென்று பார்த்த போது விஷம் அருந்தி அவர்கள் மூவரும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர்களின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர்கள் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். 
 
ஒரு வாலிபரை சொர்ணா காதலித்து வந்ததாகவும், ஆனால், அந்த வாலிபர் சொர்ணாவை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சி எடுத்து வந்ததால் தாங்கள் தற்கொலை செய்து கொண்டதாக அந்த கடிதத்தில் எழுதி வைத்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
 
இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.