1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஜனவரி 2018 (08:45 IST)

வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் பெண் தற்கொலை

திருவண்ணாமலையில் கடன் தவணை செலுத்தக்கோரி வங்கி ஊழியர்கள் மிரட்டியதால் பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் பல்லவன் நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தேன்மொழி(40). இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். சேகர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு தனியார் வங்கியில் ரூ.27 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதனை 10 தவணைகளில் கட்டுவதாக கூறி பணத்தைப் பெற்றுள்ளார்.
 
இந்நிலையில் சேகருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 3 மாதங்களாக கடன் தவணையை சரியாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட தனியார் வங்கி ஊழியர்கள் 2 பேர் தேன்மொழியின் வீட்டிற்கு சென்று உடனடியாக கடன் தவணையை செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். தவணையை செலுத்த அவகாசம் கொடுங்கள் என்று தேன்மொழி கேட்டுள்ளார். இதனை ஏற்க மறுத்த வங்கி ஊழியர்கள் தேன்மொழியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மனமுடைந்த தேன்மொழி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த திருவண்ணாமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேன்மொழியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
வங்கி ஊழியர்கள் தரக்குறைவாக பேசியதால் தான் தேன்மொழி தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி அவரது உறவினர்கள் குறிப்பிட்ட தனியார் வங்கி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.