வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 28 ஜூலை 2024 (09:06 IST)

காதலுக்கு இடையூறு.! இளம் பெண் கொலை.! தலைமறைவான இளைஞர் கைது.!!

Girl Murder
பெங்களூருவில் காதல் விவகாரத்தில்  இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
 
பெங்களூருவில் உள்ள கோரமங்களாவில் விடுதியில் பீகாரை சேர்ந்த கிருத்தி குமாரி  (24) என்ற இளம் பெண், தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 23-ம் தேதி இரவு 11.10 மணியளவில் விடுதிக்குள் வந்த இளைஞர் ஒருவர், கிருத்தி குமாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 
 
அப்போது அந்த இளைஞர், கிருத்தி குமாரியை கத்தியால்  சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் ரத்த வெள்ளத்தில் சரிந்த கிருத்தி குமாரியை  விடுதி தோழிகள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 
 
இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்த கொலை சம்பவம் குறித்து  கோரமங்களா போலீஸார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர். அதில், கிருத்தி குமாரியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய இளைஞர் அபிஷேக் (27) என்பது தெரியவந்தது. 
 
இவர் மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்தவர். இவர் கிருத்தி குமாரியின் அறையில் தங்கியிருந்த 25 வயதான பெண்ணை காதலித்து வந்துள்ளார். அபிஷேக் வேலையை இழந்ததால், அவரது காதலிக்கும் அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் கிருத்தி குமாரி தலையிட்டு சண்டையிடுவதை தடுத்துள்ளார்.

மேலும் தனது தோழியிடம் சில நாட்கள் அபிஷேக்குடன் பேசுவதை நிறுத்துமாறு கூறி, அவரை வேறொரு விடுதியில் தங்க உதவி செய்துள்ளார். இதனால் அபிஷேக் அவரது காதலியை தொடர்புகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து கிருத்தி குமாரி  மீது கோபம் அடைந்த அபிஷேக், தனது காதலை பிரித்துவிட்டதாக கூறி கத்தியால் குத்திகொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

 
இந்த திடுக்கிடும் தகவலை கேட்ட போலீஸார் போபாலுக்கு சென்று, அபிஷேக்கை  கைது செய்தனர். இந்த விவகாரம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.