டெல்லி ஓட்டல் தீவிபத்தில் பலியான இரு தமிழர்கள்; அதிர்ச்சி தகவல்
நேற்று டெல்லியில் உள்ள புகழ்பெற்ற நட்சத்திர ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உடல்கருகி பரிதாபமாக பலியான நிலையில் அவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் தற்போது வெளிவந்துள்ளது
டெல்லி கரோல் பாக் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நேற்று மின்கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ மளமளவென் ஓட்டலின் அடுத்தடுத்த தளங்களில் பரவியதால் அதில் தங்கியிருந்தவர்களும், பணிபுரிந்தவர்களும் அவசர அவசரமாக தீயணைப்பு துறையினர் உதவியால் வெளியேற்றப்பட்டனர்.
மளமளவென பரவிய தீயை கட்டுப்படுத்த 30 வாகனங்களில் வந்திருந்த 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிக்கியிருந்த பெரும்பாலானோர் மீட்கப்பட்டாலும் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த தீ விபத்தில் அரவிந்த் சுகுமாரன், நந்தகுமாரன் ஆகிய இரண்டு தமிழர்கள் உயிரிழந்ததாகவும் இருவரும் திருப்பூரைச் சேர்ந்தவர்கள் என்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. திருப்பூரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள் இருவரும் தொழில்நிமித்தம் காரணமாக டெல்லி சென்றிருந்தபோது இந்த ஓட்டலில் தங்கியிருந்ததாகவும், இந்த தீவிபத்தில் சிக்கி இருவரும் பலியானதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இன்று இருவரின் உடல்களும் திருப்பூர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.