செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2020 (11:44 IST)

லிஃப்ட் கொடுக்கும் சிபிஐ அதிகாரி!!?; நம்பி போனா ஆப்புதான்! – டெல்லியில் நூதன கொள்ளை!

டெல்லியில் தன்னை சிபிஐ அதிகாரி என சொல்லி லிஃப்ட் கொடுப்பது போல பொதுமக்களிடம் ஆசாமி கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வடக்கு டெல்லியில் புராரிக்கு செல்வதற்காக நபர் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது வாக்கி டாக்கியில் பேசிய படி அதிகாரி தோற்றம் கொண்ட ஒருவர் வந்துள்ளார். சாலையில் நின்று கொண்டிருந்த நபரிடம் அதிகாரி போல இருந்தவர் எங்கே செல்கிறீர்கள் என விசாரித்துள்ளார். அவர் புராரிக்கு செல்வதாக கூறியதும் தான் ஒரு சிபிஐ அதிகாரி என்றும் தானும் புராரிக்கு செல்வதாகவும், தானே அவரை அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார்.

சில நிமிடங்கள் கழித்து வந்த அவரது ஜீப்பில் அந்த பயணியையும் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியெல்லாம் வாக்கி டாக்கி வழியாக ஏதோ கேஸை விசாரித்து கொண்டே சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் பயணியை கீழே இறக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த கும்பல் அவரிடமிருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு ஜீப்பில் எஸ்கேப் ஆகியுள்ளது.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட டெல்லி போலீஸார் திரிலோக்பூர் பகுதியை சேர்ந்த முகேஷ் என்பவரை கைது செய்துள்ளனர். விசாரணையில் சிபிஐ அதிகாரி போல போலியாக நடித்து பணத்தை கொள்ளை அடித்ததாக முகேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக பல பேரிடம் இது போன்ற கொள்ளை சம்பவங்கள் அரங்கேற்றியிருப்பது தெரிய வந்துள்ளது.

முகேஷை கைது செய்துள்ள போலீஸார் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.