1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 25 செப்டம்பர் 2022 (10:28 IST)

வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் உஷார்..? – மத்திய அரசு எச்சரிக்கை!

சமீபத்தில் வெளிநாடு வேலைக்கு சென்ற இந்தியர்கள் பலர் மியான்மரில் சிக்கிய நிலையில் மத்திய அரசு வெளிநாடு பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை செய்துள்ளது.

வேலைவாய்ப்புகளுக்காக இந்தியாவில் இருந்து பலரும் வெளிநாடுகளுக்கு செல்வது வழக்கமாக உள்ளது. இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ள பல உள்நாட்டு ஏஜென்சிகள் இங்கிருந்து ஆட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் தாய்லாந்தில் ஐடி நிறுவனத்தில் வேலைவாங்கி தருவதாக 60க்கும் மேற்பட்டோரை மியான்மருக்கு கடத்தி சென்று அடிமைப்படுத்தி வேலை வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.


இந்நிலையில் வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதில் “தாய்லாந்து நாட்டில் டிஜிட்டல் விற்பனை, மார்க்கெட்டிங் அதிகாரிகள் பணி வழங்குவதாக கூறி இந்திய இளைஞர்களை கால்செண்டர் மோசடி, க்ரிப்டோகரன்சி மோசடிகளில் ஈடுபடுத்துவதாக பாங்காக் மற்றும் மியான்மரில் உள்ள இந்திய தூதரகங்கள் வழியாக கவனத்திற்கு வந்துள்ளது.

அதனால் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்பவர்கள் அந்நிறுவனத்திற்கு அந்நாடு வழங்கியுள்ள நற்சான்றிதழை ஆட்சேர்ப்பு ஏஜெண்டுகள் மூலம் சரி பார்க்க வேண்டும். நிறுவனத்தின் நம்பகத்தன்மையை ஏற்கனவே அங்கு பணி செய்பவர்களை நாடி விசாரித்து உறுதி செய்ய வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.