ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (14:23 IST)

மத்திய அரசின் ஹிட் லிஸ்டில் பப்ஜி! தடை செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்!

சமீபத்தில் சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்துள்ள நிலையில் தற்போது பப்ஜி விளையாட்டும் தடை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ள ஆன்லைன் விளையாட்டுகளில் பப்ஜி முக்கியமானது ஆகும். சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் இந்த விளையாட்டின் மீது ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அதேசமயம் அதீத விளையாட்டு மோகத்தால் பலர் உயிரிழக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளதாக பப்ஜிக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் சமீபத்தில் 59 சீன செயலிகள் தடை செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு சீன செயலிகளையும் மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. சுமார் 275 சீன செயலிகள் இந்த பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது. பப்ஜியின் பாதுகாப்பு அம்சங்கள் கேள்விக்கு உள்ளாகியிருப்பதால் அந்த செயலியும் தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பப்ஜி ஆன்லைன் விளையாட்டை உருவாக்கியது கொரிய நிறுவனமான ப்ளூஹோல் என்றாலும், சீனாவை மையமாக கொண்ட டென்செண்ட் நிறுவனம் இதன் அதிகமான பங்குகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.