புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 7 செப்டம்பர் 2019 (18:30 IST)

உணவு டெலிவரியில் இறங்கும் அமேசான்!?: இனிமேல் ஸ்விகி, ஸொமாட்டோ நிலை??

இந்தியாவில் உணவு டெலிவரி அப்ளிகேசன்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் பிரபல அமேசான் நிறுவனம் அடுத்த கட்டமாக உணவு டெலிவரி சேவையில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆன்லைன் விற்பனையில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் நிறுவனம் அமேசான். இந்தியாவில் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்த பெங்களூரில் மிகப்பிரம்மாண்டமான கட்டிடம் ஒன்றையும் கட்டியுள்ளது அமேசான். இந்நிலையில் உணவு டெலிவரி சேவையிலும் அமேசான் ஈடுபட போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்தியாவில் நிறைய உணவு அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் ஸ்விகி, ஸொமாட்டோ, ஊபர் ஈட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நாளொன்றுக்கு சராசரியாக 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இந்நிலையில் களம் இறங்க இருக்கும் அமேசான் முதலில் பெங்களூரில் மட்டும் சேவையை ஆரம்பிக்க இருப்பதாகவும், அது வெற்றியடையும் பட்சத்தில் இந்தியா முழுவதும் அதை விரிவுப்படுத்தவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஸொமாட்டோ, ஊபர் போன்ற நிறுவனங்களோடு உணவகங்கள் மனஸ்தாபத்தில் இருப்பதால் அமேசானால் இந்த சூழலை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஸொமாட்டோ, ஊபர் போன்ற நிறுவனங்கள் ஆர்டர் ஒன்றிற்கு 18% முதல் 25% வரை கமிஷனாக உணவகங்களிடம் இருந்து பெறுகின்றன. உணவகங்களை முதலில் ஈர்க்க திட்டமிட்டுள்ள அமேசான் கமிஷனை குறைத்து கொள்ள திட்டமிட்டிருக்கிறது. அமேசானின் கமிஷன் 5% முதல் 10% வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அமேசானில் இணைய உணவகங்கள் ஆர்வம் காட்டலாம்.

அமேசானின் கமிஷன் குறைவாக இருப்பதால் உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் உணவு அளித்தாலும் அது உணவகங்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தாது. மேலும் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அமேசான் மற்ற உணவு நிறுவனங்களை விடவும் குறைவான விலையில் உணவு வகைகளை தரவும் வாய்ப்புள்ளது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பிரபல உணவு டெலிவரி நிறுவனங்கள் சரிவை சந்திக்க வாய்ப்புள்ளதாக ஆன்லைன் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.