வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (12:46 IST)

ஒப்புகை சீட்டு வழக்கு..! தொழில் நுட்ப வல்லுநர்கள் ஆஜராக உத்தரவு..!!

Supreme Court
ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 
 
மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு நடைபெறலாம் என சந்தேகம் இருப்பதால் ஒப்புகைசீட்டுகளை முழுமையாக எண்ண வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அப்போது மனுதாரர், தேர்தல் ஆணையம் மற்றும் வழக்கறிஞர் தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
 
உச்சநீதிமன்ற நீதிபதிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தனர். இதன்பின் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் ஒப்புகை சீட்டுகளை 100% எண்ணக் கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்தவகையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது விவிபேட் மைக்ரோ கண்ட்ரோலர் தொடர்பாக சில சந்தேகங்கள் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
மைக்ரோ கண்ட்ரோலர் விவிபேட்டில் பொறுத்தப்பட்டுள்ளதா? அல்லது கண்ட்ரோல் யூனிட்டில் பொறுத்தப்பட்டுள்ளதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோக்ராம் செய்யக்கூடியவையா? எத்தனை பேலட் யூனிட்டுகளில் சின்னங்கள் பொருத்தப்படும் எனவும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

 
எனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்படும் விவகாரங்களில் எங்களுக்கு இன்னும் சில முக்கிய சந்தேகங்கள் இருக்கிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இதனால் தங்களது கேள்விகளுக்கு தேர்தல் ஆணைய அதிகாரி மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்கள் பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் மீதான தீர்ப்பை பிற்பகல் 2 மணிக்கு ஒத்திவைத்தனர்.