திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : புதன், 24 ஏப்ரல் 2024 (12:25 IST)

சூடு பிடிக்கும் தேர்தல் களம்.! இன்றுடன் ஓய்கிறது 2-ஆம் கட்ட பரப்புரை..!

Election
13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி அந்த மாநிலங்களில் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ளது.
 
7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது.  தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
 
அசாம், பிகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர், ஜம்மு-காஷ்மீரில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில், கேரளாவின் அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் . அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா, பாஜகவின் மாநில தலைவர் கே. சுரேந்திரன் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
 
திருவனந்தபுரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சஷிதரூர் காங்கிரஸ் சார்பிலும், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பாஜக சார்பிலும் போட்டியிடுகின்றனர். திரிச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி களம் இறக்கப்பட்டுள்ளார் . அவருக்கு எதிராக காங்கிரசின் கே. முரளிதரனும், சிபிஎம் சார்பில் வி.எஸ். சுனில் குமாரும் போட்டியிடுகின்றனர்.
 
28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவின் 14 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெங்களூரு ரூரல், பெங்களூர் வடக்கு, பெங்களூர் சென்ட்ரல், பெங்களூரு தெற்கு, ஹாசன், மாண்டியா மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் கடுமையான போட்டி நிலவுகிறது. 
 
இதேப்போல் ராஜஸ்தானில் மீதமுள்ள 12 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜோத்பூரில் போட்டியிடுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் ஜலோரிலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டாவிலும் களம் காண்கின்றனர்.
 
மகாராஷ்டிராவை பொறுத்தவரை, அங்கு 8 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. கடந்த முறை சுயேச்சையாக போட்டியிட்ட நடிகை நவ்நீத் ராணா, அமராவதி தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். மகாராஷ்டிராவைப் போலவே உத்தர பிரதேசத்திலும் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. நடிகை ஹேம மாலினி மதுரா தொகுதியில் களம் காண்கிறார்.
 
மேற்கு வங்கத்தில் டார்ஜிலிங், பலூர்காட், ராய்கஞ்ச் ஆகிய மூன்று தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பாலூர்காட்டில் பாஜகவின் மாநிலத் தலைவர் சுகந்தா மஜும்தார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிப்லப் மித்ராவை எதிர்கொள்கிறார். டார்ஜிலிங்கில் ராஜு பிஸ்டா மற்றும் திரிணாமுல் காங்கிரசின் கோபால் லாமா இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது.

 
முதல் கட்ட தேர்தலில் நாட்டிலேயே மிகவும் குறைந்த அளவு வாக்குப்பதிவான பிகாரில் 5 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. அங்கு பாஜகவை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அசாமின் ஐந்து தொகுதிகளிலும், சத்தீஸ்கரின் 3 வாக்கு பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் நடைபெற உள்ளது.