சகிப்புத் தன்மை இல்லாததால் அதிகரிக்கும் மாணவ மரணங்கள்
சமீபத்தில் பள்ளிக் குழந்தைகளின் தற்கொலைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநிலம் கோடாவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து சிறுவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோடாவில் உள்ள வாட் ஜோதிபா மேல்நிலைப்பள்ளியில் மோகன் என்ற சிறுவன் படித்து வந்துள்ளான். சம்பவத்தன்று சிறுவன் வீட்டுப் பாடத்தை எழுதவில்லை என்பதற்காக ஆசிரியர் சக மாணவர்கள் முன்னிலையில் கடுமையாக அடித்துள்ளார். இதனால் மாணவன் மிகவும் சோகத்தில் இருந்ததாக மோகனின் பெற்றோர் தெரிவித்தனர். மாணவனின் உடல் நிலை மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இதுகுறித்து மாணவனின் பெற்றோர் மஹாவீர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில் பள்ளி நிர்வாகி சுமன், மாணவர்கள் நல்லொழுக்கத்தை கடைபிடிக்க கண்டிப்போடு இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும், அதனால் மாணவனின் மரணத்திற்கும் நிர்வாகத்திற்கும் எந்த பொறுப்புமில்லை என்றார். மோகன் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலே உயிரிழந்ததாக சுமன் கூறினார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.