புதன், 27 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By
Last Modified: சனி, 13 ஜூலை 2019 (19:31 IST)

கூர்கா: சினிமா விமர்சனம்

நகைச்சுவை நடிகரான யோகிபாபு கதாநாயகனாக நடித்த தர்மபிரபு கடந்த வாரம்தான் வெளியான நிலையில், அவர் நாயகனாக நடித்த மற்றொரு படமாக 'கூர்கா' இந்த வாரம் வெளியாகியிருக்கிறது.


 
திரைப்படம் கூர்கா
நடிகர்கள் யோகிபாபு, சார்லி, நரேன், ரவி மரியா, எலிசா எர்ஹத், ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், ராஜ்பரத்
ஒளிப்பதிவு கிருஷ்ணன் வசந்த்
இயக்குநர் சாம் ஆண்டன்
 
கூர்கா ஒருவரை தன் மூதாதையராகக் கொண்ட யோகிபாபு, காவல்துறையில் சேர வேண்டுமென நினைக்கிறார். ஆனால், உடல் ரீதியாக தகுதிப்பெற முடியவில்லை. அதனால், ஒரு நிறுவனத்தில் காவலராக பணியில் சேர்கிறார். அந்த நிறுவனத்தின் மூலம் ஒரு பெரிய 'ஷாப்பிங் மால்' ஒன்றில் பாதுகாவலராகிறார்.
 
அமெரிக்கத் தூதகரத்தில் பணியாற்றும் மார்க்ரெட்டைக் காதலிக்கிறார். ஒருநாள் மார்க்ரெட் அந்த ஷாப்பிங் மாலுக்குள் இருக்கும்போது, தீவிரவாதிகள் சிலர் அவர் உட்பட பலரைப் பிடித்துவைத்துக் கொண்டு பணம் கேட்டு மிரட்டுகிறார்கள். இந்த நெருக்கடியிலிருந்து பிணைக் கைதிகளை யோகிபாபு எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.



யோகிபாபுவை மட்டுமே நம்பி உருவாக்கப்பட்டுள்ள படம். அதனால், கதை, திரைக்கதையில் துவங்கி எல்லாவற்றிலும் அலட்சியம் தெரிகிறது. யோகிபாபு காவல்துறை வேலைக்கு சேர செய்ய முயற்சிகள் என்ற பெயரில் வரும் காட்சிகள் சிரிக்க வைப்பதற்குப் பதிலாக கடுமையான எரிச்சலை ஏற்படுத்துகின்றன.
 
இதற்குப் பிறகு அமெரிக்கத் தூதரை (?) யோகிபாபு காதலிப்பது, ஐஎஸ்ஐஸ் சம்பந்தமில்லாமல் ஒரு கடத்தல் வேலையில் ஈடுபடுவது என படத்தில் ஏதேதோ நடக்கிறது.
 
படம் நெடுக, தன்னுடைய பதில் வசனங்களால் சிரிக்கவைக்க முயற்சித்துக்கொண்டே இருக்கிறார் யோகிபாபு. ஆனால், படம் நெடுக தனி ஆளாக எப்படி ஒருவர் அதை செய்துகொண்டே இருக்க முடியும்? அதனால், வெகுசீக்கிரத்திலேயே படம் தள்ளாட ஆரம்பிக்கிறது.
 
நமோ நராயணன், மயில்சாமி, மனோபாலா, சார்லி, ரவி மரியா என ஒரு சிரிப்பு நடிகர் கூட்டமே இருந்தாலும் நகைச்சுவைக்கு மிகக் குறைவான தருணங்களே அமைந்திருக்கின்றன.


 
தமிழில் மிக வேகமாக வளர்ந்துவந்த நகைச்சுவை நடிகரான யோகிபாபு, ஒரு படத்தில் இடம்பெற்றிருந்தாலே அந்தப் படத்தை பார்க்க தனியாக ரசிகர்கள் திரண்டனர். ஆனால், இதுபோன்ற படங்கள் அவர் மீதான இந்த ஈர்ப்பைக் குறைக்கின்றன.
 
இயக்குனர் சாம் ஆண்டன் தனது முந்தைய படமான '100' மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால், இந்தப் படத்தில் ஏமாற்றமளிக்கிறார்.