யாருடன் கூட்டணி..! 4+1 கேட்கும் தேமுதிக.! மாவட்ட செயலாளர்களுடன் பிரேமலதா ஆலோசனை.!!
மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து மாவட்ட செயலாளர்களுடன் தேமுதிக பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாடாளுமன்ற மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தமிழகம் முழுவதும் உள்ள 79 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்தும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்தும், எத்தனை தொகுதிகள் கேட்பது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளின் அடிப்படையில் கூட்டணி குறித்து தேமுதிக தலைமை முடிவெடுக்கும் என சொல்லப்படுகிறது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்ற தேமுதிக நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தன. கடந்த சட்டமன்ற தேர்தலிலும் தேமுதிக படுதோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியில் இடம் பெற்று, தேர்தலை எதிர்கொண்டு சரிவிலிருந்து மீள தேமுதிக தயாராகி வருகிறது. வரும் தேர்தலில் கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட ஏழு தொகுதிகளை தேமுதிக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறைந்தபட்சம் நான்கு மக்களவைத் தொகுதிகள், ஒரு மாநிலங்களை பதவி கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தேமுதிக தயாராக உள்ளதாக சொல்லப்படுகிறது. தேமுதிகவுடன் அதிமுகவும், பாஜகவும் ஒரே நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. தேமுதிகவின் நிபந்தனைகளை எந்த கட்சி ஏற்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.