ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : சனி, 3 பிப்ரவரி 2024 (13:11 IST)

தேர்தலில் தமாகா யாருடன் கூட்டணி.! பிப் 12-ல் செயற்குழு - ஜி கே வாசன்..!!

gk vasan
சென்னையில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி கே வாசன் தெரிவித்துள்ளார்.
 
மக்களவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை, நிர்வாகிகளுடன் ஆலோசனை, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 
annamalai- edapadi- jeyakumar
கடந்த முறை பாஜக, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலை சந்தித்து நிலையில், தற்போது இரு கட்சிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. இதனால் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில், எந்த கட்சிகள் இணையும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எழுந்து வருகிறது.

 
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், பிப்ரவரி 12ஆம் தேதி,  தமாகா செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.
 
தேர்தல் வியூகம், கூட்டணி உள்ளிட்டவை குறித்து தமாகா பொதுக்குழுவில் ஆலோசனை நடத்தப்படும் என்றும் கட்சியின் நலன் அடிப்படையில் கூட்டணி குறித்து ஆலோசித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.