வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (18:49 IST)

தொடரும் தேர்தல் அத்துமீறல்..! 3-வது முறையாக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு..!

Manzoor Ali Khan
அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மன்சூர் அலிகான் மீது மூன்றாவது முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
நாடாளுமன்றத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும்  இந்திய ஜனநாயக புலிகள் கட்சித் தலைவரும், நடிகருமான மன்சூர் அலிகான் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
 
அப்பொழுது தேர்தல் பறக்கும் படை அலுவலர் அகமது ஜலாலுதீன் தலைமையிலான அதிகாரிகள் மன்சூர் அலிகானிடம் தேர்தல் ஆணையத்தின் உரிய அனுமதியில்லாமல் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது எனக் கூறியபோது, நான் பிரச்சாரத்திற்காகத் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தால் தேர்தல் முடிந்த பின்னர் தான் அனுமதி வரும் எனத் பேசியதாகக் கூறப்படுகிறது.
 
இந்நிலையில் அனுமதியின்றி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக மன்சூர் அலிகான் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி அகமது ஜலாலுதீன் ஆம்பூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மன்சூர் அலிகான் மீது 4 பிரிவுகளின் கீழ் ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 
ஏற்கனவே கடந்த மார்ச் 19 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஆம்பூரில் உரிய அனுமதியின்றி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக மன்சூர் அலிகான் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.