பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!
தமிழகம் முழுவதும் இன்று பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கப்பட்டது என்பதும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து அந்த தொகுதியில் மட்டும் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவது, அந்த தொகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கல் தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம் பணி முடிவடைந்த நிலையில், இன்று முதல் பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இலவச வேட்டி சேலையும் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு உள்ளதால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அந்தந்த ரேஷன் கடைகளுக்கு தகவல் அனுப்பப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்தில் பொங்கல் தொகுப்பு வழங்க அனுமதி கோரி உள்ளதாகவும் அனுமதி கிடைத்தவுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொங்கல் தொகுப்பு வாங்க வந்த பயனர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran